Sunday, March 29, 2009

ஹலீல் ஜிப்ரானும் சில துடுக்குத் தனங்களும்



நம் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பவர்கள் பரவாயில்லை ரகம். நம் நம்பிக்கைகளே தவறு என்று சொல்பவர்கள் அடாவடி ரகம். அப்படியானவர்களால்த் தான் உலகம் நிரம்பிக்கிடக்கின்றது. அது தான் வாழ்க்கை பற்றிய புரிதல்களை குழிதோண்டிப்புதைக்கும் சாபக்கேடு. நம்பிக்கைகள் தான் வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் கொடிக்காம்பு.

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் "ரிஸெஸ்ஸ"னுக்குக் காரணம் உலகம் உள்ளங்கையில் என்ற நம்பிக்கை. அதுதான் இன்று உலகை அலைகழித்துக் கொண்டிருக்கின்றது. பழைய வரைபடங்களை அழித்து புதிய வரைபடங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. தம் விருப்பங்களையும் மீறி உலக மக்கள் இந்தப்போக்கில் கட்டுண்டு கிடக்கின்றார்கள்.

பல கோடி ரூபாக்கள் கடனுள்ள நாடுகள் எல்லாம் பிராந்தியங்களைக் கூறு போடும் கனவுகளில் மிதக்கின்றார்கள். மனிதத்தை மிதித்து ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்புடன் செயல்படுகின்றார்கள்.

ஆனாலும் உன்வீட்டுக்குள் உன் விருப்பப்படி இருக்க முடிகின்றது. உன் மக்களுடன் உன் மொழியில் பேச முடிகின்றது. அத்தனை ரெளத்ரமாக அது இன்னும் உன்னைச் சுத்திப் பிடிக்கவில்லை. இது உலகத்தைப் பொறுத்தளவில் ஒரு புதிய போக்கு. அது எவ்வளவு தூரம் போகும் என்பதை யாராலும் கூறமுடியாது.

உலகம் பலமுறை அழிந்து பிறந்திருக்கின்றது. புதிய புதிய நம்பிக்கைகள் உலகத்தை ஆட்டிப்படைத்திருக்கின்றன. இருந்த போதும் உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருப்பது என்னவோ தனி மனித நம்பிக்கைதான். தனி மனிதர்களின் கூட்டாகிய சமூகத்தின் நம்பிக்கை ,இனத்தின் நம்பிக்கை. அதை மீறி யாரும் இல்லை.

ஆளப்பிறந்தவர்கள் என்ற ஹிட்லரின் நம்பிக்கையும் அடங்கிப்போக பிறந்தவர்களல்ல என்ற ரஷ்யரின் நம்பிக்கையும் அவரவர் நம்பிக்கை. விளைவுகள் மாறு படக் கூடும். ஆனால் நம்பிக்கைகள் பொய்த்துப்போவதில்லை. ஒரு காலத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டுமென்பதுவும் அல்ல. ஆனால் அவ்வக் காலத்தின் நம்பிக்கையே அன்றைய வாழ்க்கை. அது இல்லையென்று ஆகி விடுவதில்லை.

இந்த நம்பிக்கைகளை மறுதலிப்பவர்கள் மீது கோபம் வருகின்றது. கிராமத்தில் வசிக்கும் இளைஞனின் கனவு பில் ஹேட்ஸ்ஸின் நிறுவனத்தில் வேலை செய்வது .அது அவன் கனவு, வேலை செய்ய முடியும் என்பது அவன் நம்பிக்கை.
அதைக்கேள்வி கேட்கலாம். அதற்கான ஆயத்தத்தைப் பற்றி கேள்வி கேட்கலாம். தயாரிப்புக் குறைபாட்டை சுட்டிக்காட்டலாம். ஆனால் அந்த நம்பிக்கையே தவறு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அந்த இளைஞனின் நம்பிக்கை போன்றது ஈழத்தமிழ் மக்களின் போராட்டம். அந்த மக்களின் நம்பிக்கையே அவர்களை வழி நடாத்துகின்றது. இத்தனை இழப்புகளையும் தாண்டி செயற்பட முடிகின்றது. தனித் தமிழீழம் சாத்தியம் இல்லை என்று கூற யாருக்கும் உரிமையில்லை. அது மனித தர்மங்களை மீறிய கனவு அல்ல.

பாலஸ்தீனியர்களின் நிலங்களைப் பிடுங்கி இஸ்ரேலைக் கட்டியது போன்ற அடாவடியல்ல. தன் நிலத்தில் தான் வாழும் விருப்பு நம்பிக்கையாக அவர்களை வழி நடாத்துகின்றது. அவர்கள் நம்பிக்கையில் தலைபோட அமெரிக்காவிற்கு என்ன தேவை வந்தது. இந்திய அரசியல்வாதிகளுக்கு என்ன உரிமை உண்டு.

அப்பாவி மக்களின் தலைமீது குண்டுபோடும் ஆணவம் எப்படி வந்தது. தமிழ் மக்கள் சிங்களக் குண்டர்களின் குடிமக்களல்ல. வன்னிக்காடுகளில் சிங்களக் காவாலிகளுக்கு என்ன வேலை? வன்னி மக்களின் உயிர்கள் போவது சிங்களக் காடையர்களின் குண்டுகளால்தான்.

வன்னி மக்களின் மீட்பைப் பற்றிப்பேசும் யாரும் குண்டுபோடும் குண்டர்களை நிறுத்தச் சொல்லிக்கேட்கவில்லை. குண்டர்கள் குண்டு போடுவதை நிறுத்தினால் உயிர் இழப்புகள் தவிர்க்கப்படுமே. அங்கிருக்கும் மக்கள் ஒன்றும் அன்னியரின் இடத்தைக் கைப்பற்றியவர்கள் அல்ல. அது அவர்களின் சொந்த இடம் . சொந்த இடத்தில் இருக்கவிடாது வெளியேற்றுவது காப்பாற்றுவதென்பதல்ல.

அன்னியரும் மற்றவர்களும் தங்கள் தேவைக்காக எதையும் சொல்லலாம். அதைக்கேட்பதுவும் கேட்காததும் அம்மக்களின் விருப்பு. மாக்ஸிஸப்போதையில் மாற்றுக் கனவு பற்றிப்பேசும் தமிழ் மூடர்களின் கொடுமை தான் தாங்க முடியவில்லை. குண்டுபோடும் சிங்களவனை மறிக்கவோ கேள்வி கேட்கவோ திராணியற்ற இக்கேணையர் கூட்டம் சொந்தச்சோதரரை திட்டித்தீர்க்கும் எலிக்கூட்டமாகச் செயற்படுகின்றது.

குண்டுகளால் கொன்று போடும் சிங்களக் காடையனின் வேலைகளைத் தானே உன் நேர்மையற்ற சொற்களும் செய்துபோகின்றது. தன் மண்ணில் வாழுவதை தவறென்று சொல்லும் பேடிமை உனக்கெப்படி வந்தது. குண்டு போடும் சிங்களத்தையும் கொம்பு சீவும் வல்லாதிக்கத்தையும் கேள்வி கேட்காது உன் சொற்கள் முனை மழுங்கிப்போனதேன்.

துரியன் தவறு செய்கின்றான் என்று தெரிந்தும் நட்பினால் இணைந்த கர்ணன் எங்கே. தன் மக்கள் சாதல் கண்டும் தமிழாலும் இணையாத உன் நரி முகம் எங்கே.

நம்பிக்கைகள் தான் நாகரீகங்களைக் கட்டியெழுப்புகின்றன. நம்பிக்கைகள் தான் வல்லாதிக்கங்களைத் தகர்த்தெறிகின்றன. தமிழ் மக்களின் நம்பிக்கையும் அதனை ஒரு நாள் செய்யும். அப்போது உனக்கும் ஒரு கல்லறை அங்கே இருக்கும். இவனை போல வாழாதீர்கள் என்ற அறிவிப்புடன்.

இந்த இடத்தில் தான் ஹலீல் ஜிப்ரானை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

"ஒரு நாள்
மெத்த அறிவு படைத்த நாய் ஒன்றின்
பாதையின் வழியே
ஒரு பூனைக் கூட்டம் கடந்து சென்றது.
தன்னைக் கவனிக்காமல்
அப் பூனைக் கூட்டம்
மிகுந்த முனைப்புடன்
முன்னோக்கிச் செலவதைக் கண்ட நாய்
நின்று கவனித்தது.

பூனைகள் வட்டமாக அமர்ந்தன.
மூத்த பூனை ஒன்று,
உறுதியும் எச்சரிக்கையும்
தொனிக்கும் குரலில் சொன்னது,
"சகோதரர்களே..!
வழிபடுங்கள், வழிபடுங்கள்,
நம்பிக்கையோடும், கீழ்ப்படிதலோடும்
மீண்டும் மீண்டும் நாம்
வழிபட்டால்
வானத்திலிருந்து
கணக்கற்ற எலிகள் மழையாகப் பொழியும்.."

இதைக் கேட்ட நாய்
பரிகசித்துச் சிரித்தபடி
தனக்குள் சொல்லிக் கொண்டது,
"இந்த முட்டாள் பூனைகளின்
குருட்டு நம்பிக்கைகளுக்கு
அளவில்லாமல் போயிற்றே..
நமது ஆதி நூல்களில் எழுதப்பட்டு
நானும் எனக்கு முன்னால் என் முன்னோரும்
அறிந்த உண்மைகளின் படி
நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் மிக்க
வழிபாட்டின் பலனாக
மழையாகப் பொழியப் போவது
எலிகளல்ல, எலும்புத் துண்டுகளன்றோ..!"

ஆம் அவரவரின் நம்பிக்கைகள் அவர்களுக்கு முக்கியம். ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் காலில் போட்டு மிதியாதீர்கள்.

நம்பிக்கைகளை வென்றெடுப்பது அதே மக்களாலேயே ஆகக் கூடியது. மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களே. அப்படித்தான் சரித்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டரிடம் கேட்டுப்பாருங்கள். தன்னை எதிர்த்தவர்கள் எல்லாம் வெறும் ஆயுதத்தினால் எதிர்த்தவர்கள் அல்ல. தங்களுக்கு அந்த மண் மீது இருந்த உரிமையினாலேயே எதிர்த்தார்கள் என்று கூறுவார். அலெக்ஸாண்டர் அங்கிருந்து போய் விட்டார். ஆனால் அந்த மக்கள் அங்கிருந்து போகவில்லை.

அதையே தான் சரித்திரம் நாளை ஞாபகப்படுத்தும். வன்னிக்காடுகளில் அலையும் சிங்களவரும் இந்தியர்களும் அமெரிக்கர்களும் நாளை போய் விடுவார்கள். அல்லது துரத்தப்படுவார்கள். அவர்களுடன் சேர்ந்து தமிழர்களாய் இருந்த எட்டப்பர்களும் தான்.

7 comments:

மின்னுது மின்னல் said...

குட் !!

"திங்"கர் said...

வாருங்கள் மின்ன;!

மின்னாது முழங்காது சொல்லீட்டிங்க..

அதியமான் said...

இந்த பதிவு உயிரோட்டம் உள்ள ஒன்று.......வேறு ஒன்றும் சொல்ல வார்த்தை இல்லை.....
அதியமான்.

அதியமான் said...

இந்த பதிவு உயிரோட்டம் உள்ள ஒன்று.......வேறு ஒன்றும் சொல்ல வார்த்தை இல்லை.....
அதியமான்

"திங்"கர் said...

வாருங்கள் அதியமான்!
மனித வாழ்க்கையின் மையத்தைப்புரியாத இவர்களுடன் என்ன செய்வது.

மனிதர்களை நேசிக்காத அறிவு பூஜ்யம் தான்.
புரிந்து கொண்டவர்கள் தன்னைப்பற்றிப் பெருமைப்பட ஏதோ ஒரு காரணம் இருக்கும்..

நிகழ்காலத்தில்... said...

\\ஆம் அவரவரின் நம்பிக்கைகள் அவர்களுக்கு முக்கியம். ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் காலில் போட்டு மிதியாதீர்கள்.\\
உண்மைதான்....
வாழ்த்துக்கள்....

"திங்"கர் said...

வாங்க அறிவே தெய்வம்!

வருகைக்கு நன்றி.

Post a Comment