Friday, March 27, 2009

நாங்களும் கோபாலபுரம் போனோமில்லே


எலக் ஷனும் அதுவுமா தமிழ்நாடே கொந்தளிச்சுக்கிடக்கிர நேரத்தில...இணைப்பும் தொடுப்புமா ஒரு மகா ரேசில கட்சிக ஓடிக்கிட்டுருக்கும் போது.. ஆனானப்பட்ட விசயகாந்து பாட்டாளி டாக்குத்தரையா எல்லாரும் திபோ திபோன்னுஅடிச்சுக்கிட்டிருக்கிற நேரத்தில...இது வேணுமான்னு கேட்டுப்ப் பார்த்தேன். என்ன கொந்தளிப்போட கொந்தளிப்பா நம்ம கோபாலபுரம் விசிட்டயும் சொல்லிப்புடுவோம்னு பட்டுது. இனியென்ன சொல்லிட வேண்டியது தான.

நீங்க எந்தக்கட்சி என்ன விஷயம்னுல்லாம் கொந்தளிச்சுக்கிட்டிருக்கீங்க கொஞ்சம் அடங்குங்க. எல்லாத்தையும் விலாவரியா சொல்லிப்புடுவம் இல்லை. அது ஒரு சூடேறிப்போன வெய்யில் சுட்டெடுத்த காலைப்பொழுது. கோபாலபுரம் சாலை மஞ்சள் கல்லில கறுப்பெழுத்து . சரியான இடத்துக்கு வந்துட்டோம்னு மனசுக்கு நிம்மதி.

நம்ம கலைஞர் இங்க தாம்பா இருக்காரு....கூட வந்தவர் ஆச்சரியம் அதிசயம் கலந்த கலவையுடன் ஞானப்பெருக்காக பகர்ந்து புல்லரிச்சாரு. அது சரிப்பா நாம வந்த வேலைய பாக்க வேணாமா?

நான் மறுபடியும்.... நாங்க வந்திருக்க வேலையை (எத்தனை சீட்டு எந்தெந்த தொகுதி .. அவசரப்படாதீங்கப்பூ ) ...

கொஞ்சம் பொறுங்கப்பா .."பொறுத்தார் புவி ஆள்வார் பொங்குனார் காடுறைவார் " பெரியவங்க சொல்லியிருக்காங்கப்பா.. புவி ஆளத்தானே வந்திருக்கம்..

"என்னப்பா இந்த புத்தகக் கடை முன்னாடி கூட்டம்..? "

"சினிமா சூட்டிங்கப்பா.. "
"அட சந்திக்கு சந்தி இவங்க ரோதனை.."

எலக் ஷன் பத்தியெல்லாம் கவலைப்படாத ஜென்மங்க.. அரசியலால மாத்த முடியாத ..அதைபத்தி நம்பிக்கையே இல்லாத இவங்க சினிமாவால என்ன சமுதாயப்புரட்சியைச் செய்யப் போறாங்களோ.. மனதிற்குள் சலிப்பேற்பட்டது.

இவர்களைப்பொறுத்தவரை அரசியலும் சினிமா போல ஒரு படங் காட்டல் தான். இல்லேன்னா எப்படி.... இப்போ வருவேன் ...வரும்போது வருவேன்... எப்போதும் வருவேன் னு .. படங்காட்ட முடியுது. அவங்க கூறும் வார்த்தைச் சிலம்பைப்பிடித்து அக்குவேறு ஆணி வேறாக பிரித்தெடுத்து தட்டி கட்டும் இந்த சமுதாயத்தை யாரால் காப்பாற்ற முடியும்.

யாரோ யாரோ படங்காட்ட தன் இளமையையும் தன் தந்தையின் உழைப்பையும் தாரை வார்க்கும் இளைய சமுதாயம் தானே நாளைய நம்பிக்கை நாயகர்கள்.

சரி சரி வந்த வேலை.. முதல்ல அன்ணாச்சியைப் பாக்கணும் .. அவர் தான இறைவன் முன்னாடி நந்தி மாதிரி... நந்தி தரிசனத்துக்கு அப்பால தான தலை தரிசனம் அதுதாங்க தல பெருமாள் தரிசனம்..

என்னா டைரக்டரு நம்மளயே பாக்கிராப்போல .. என்ன நம்ம மனப்பிராந்தியோ.. சும்மா சொல்லப்படாதுங்கோ கொஞ்சம் செவலையா வெடவெடன்னு உயரமாய் இருப்பேனுங்க. அடுத்த படத்துக்கு கதாநாயகன் தேடுறாரோ... மனசுக்குள்ள லேசா நெனப்பு ஓடினாலும் .. நம்ம ரேஞ்சுக்கு... கீறிக்கிளர்ந்த செருக்கு (என்னா ஒரு அப்பாவித்தனம்) கண்டுக்காம நகர வைச்சது.

அன்ணாச்சி அடிக்கொரு தரம் உஷ் ..உஷ் ..அப்பாடா என்று வியர்த்துக்கொண்டிருந்தார். நாங்க போன விடயத்தை ஞாபகப் படுத்த முனைந்தபோதெல்லாம் எங்களுக்கு வெய்யிலின் கொடுமையைப் பத்தி
லெக் ஷர் அடித்துக்கொண்டிருந்தார். "நல்லா தயிர் சாப்பிடுங்கப்பா.." அட்வைஸ் வேற..

இப்படியே போனா நம்ம அம்பிஷன் என்னாவுரது.. உலகத்தை ஆளப்புறப்பட்ட இளமை கேள்வி கேட்டது. ஒரு ஆபிரகாம் லிங்கன் போல ஒரு கார்ல் மார்க்ஸ் போல .. இவங்க இருவருக்கிடையிலும் ஒரு தொடர்பும் கிடையாது. ஆனாலும் அவங்களுக்கிருந்த அந்த பாப்புலாரிட்டி தான் அவர்களை எங்களுக்கு வாலிபத்தில் அறிமுகப்படுத்தியது. அப்புறம் அவங்களைப்படித்தது தெளிந்தது வேற கதை..

அண்ணாசி ..அசருற ஆளாத் தெரியல்லே.. அப்புறம் பார்க்கலாம்னு தண்ணி தெளிச்சு அனுப்பிட்டாரு.

திரும்பி வரும் போது தான் சந்தேகம் வந்தது. நாம் அங்கு போகும் போது தெருமுக்கில் சென்று மறைந்த அந்தக் குழு .. எங்களை முந்திக்கொண்டதோ என்று...

"நாளக்கி அவங்களை அமுக்கிடணும்பா"

சரி அமுக்கினாத்தானே தெரியும் யார் ஜெயிச்சதுன்னு...

( அடங்குங்கப்பா நாளைக்குப்பார்க்கலாம்..)

No comments:

Post a Comment