
வன்னியின் காடுகளில் கந்தகம் மூக்கை அரித்துக்கொண்டிருக்கின்றது. செல்களின் சீழ்க்கை ஒலி மரணதூதனின் திசைகளற்ற பறப்பை எதிரொலித்துக்கொண்டிருந்தது. வாழ்க்கையின் நிரந்தரமின்மையைக் கேள்வி கேட்டதைப்போலவே வாழும் ஆசையையும் போக்கிவிட்டது.
நேற்று இதே முத்தத்தில் ஓடி விளையாடிய குழந்தையை மண்ணள்ளிப்போட்டு மூடியாகிவிட்டது. குழந்தையைத் தோளில் போட்டிருந்த அம்மாவின் கையை தொங்கிய மரத்திலிருந்து புடுங்கி வரவேண்டியதாகப் போய்விட்டது. காய்ந்து தேங்கிய இரத்தத்தை மண்ணள்ளிப் போட்டு காபந்துபண்ணியாகி விட்டது.
ஓடிக்களைத்து விட்ட ஒவ்வோரிரவிலும் கருத்துப்பெருத்த மரங்களின் அடர்த்தியைப்போல மரண பயம் அழுத்திக்கொண்டிருக்கின்றது. மனிதர்களெல்லாம் கைகழுவி விட்ட தீவாந்தரத்தில் ஒதுங்கிக்கொண்டதைப்போல இறுக்கத்தில் சுவாசம் ஒடுங்கிக் கொண்டிருக்கின்றது.
ஓங்கியெழும் கேவல்களையெல்லாம் வன்னிக்காடுகளின் உயர்ந்த மரங்கள் தங்களுக்குள்ளேயே விழுங்கி தீர்க்கின்றன. உலகம் முழுவதும் ஜனநாயகம் பேசும், மனிதம் கதைக்கும் நாடுகள் எல்லாம் எங்கோ ஒதுங்கிப்போய்விட்டன.
பாட்டெழுதும் கவிஞர்களும் "பந்த்" வைக்கும் அரசியல் வாதிகளும் தீர்ந்து போய்விட்டனரா?
தமிழகத்து தொப்பூழ் உறவுகளும் புலம்பெயர் தேசத்து இரத்த உறவுகளும் எம்மை மறந்தே போய்விட்டனரா?
1857 இல் டெல்லியில் இடம்பெற்ற கலவரத்தில் டெல்லியைக் கைப்பற்றியிருந்த சுதேசிப்படைகளிடம் இருந்து 1857 செப்டம்பர் 20ம் தேதி மீண்டும் டெல்லியை மீண்டும் கபளீகரம் செய்தனர். மன்னர் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்தோடு விடவில்லை. வெறி பிடித்துக் கோரத்தாண்டவம் ஆடினர்.
இதனை நேரில் பார்த்த கிரி பித்ஸ் என்பவர் தனது siege of delhi நூலில் எழுதுகிறார்:
அடிவயிறு பதைபதைக்க பெருந்துக்கத்தின் சாட்சியாய் கிடந்தது அந்த மண்.“தெருக்கள் கடுமையான அதிர்ச்சியில் தாக்குண்டு மயான அமைதியோடு கிடந்தன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்த பிரதேசத்திலேயா நாம் இப்போது இருக்கிறோம் என்பதையே நம்ப முடியவில்லை.சிப்பாய்களும், ஜனங்களும் உயிரற்றுத் தரையெங்கும் எல்லாத் திசைகளிலும் கிடந்தார்கள். குடலைப் புரட்டுகிற தாங்க முடியாத நாற்றம் காற்றில்...”
அந்த மண்ணின் சந்தோஷங்களும் இருப்பும் ஆக்கிரமிப்பின் வல்லுறவில் அழித்து ஒடுக்கப்பட்டது.
1857 டிசம்பரில் கவிஞர் மிர்ஜா காலிப் தனது நண்பருக்கு எழுதுகிறார்...
முன்ஷி ஹர்கோபால் தஃப்தா அவர்களுக்கு!
நாமெல்லாம் கூடிக் கவிதைகள் பாடி இன்பமாகப் பொழுது போக்கிய அந்தக் காலம் இப்போது கனவு போல் இருக்கிறது. இன்று அந்தச் சூழ்நிலை, அந்த நிலவரம், அந்த வசதி எல்லாம் போய் விட்டன. நட்பு, பரிவு, மதிப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.
நான் வேறு பிறவி எடுத்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது இருந்த டில்லியா இது. மக்கள் எல்லோரும் டில்லியை விட்டுப் போய் விட்டார்கள். போகாதவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ள நிலைமையை எழுதவே அச்சமாய் இருக்கிறது. ஆங்கிலேயே ஜெனரல் துரை ஆட்சியில் கெடுபிடி அதிகம். கோட்டை வாசலில் தினமும் விசாரணை. வழக்கு, பரிசோதனை. இன்று வரை அதே நிலைமைதான். மேலே என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.
இது டெல்லி மண்ணுக்கு இரண்டாவது பேரழிவு. முதல் முறை விதேசி மன்னன் ஷாநவாசின் படையெடுப்பின் போது டெல்லி நகரம் மூளியாக்கப்பட்டது. கண்டவர் அனைவரையும் இரவுபகலாக வெட்டியெறிந்து பிணமலையைக் குவித்தனர். அன்றை பாதுஷா அவன் காலடியில் விழ எஞ்சியிருந்தவர்கள் தப்பிப்பிழைத்தனர்.
அன்று வெள்ளை எஜமான்களின் விரலசைவில் டெல்லி துவண்டது. இன்று அதே டெல்லி எஜமான்களின் கண்ணசைவில் வன்னி துக்கித்துப்போய் இருக்கின்றது.
அன்று தங்களை மனிதர்களாய் எண்ணி இரங்கல் பா எழுதியவர்கள் இன்று எவ்வாறு நினைத்துக்கொண்டு மரணப்பா எழுதிக்கொண்டிருக்கின்றார்களோ?
இன்று வன்னியின் காடுகளுக்குள் வாழ்வதற்காகவன்றி தங்கள் உயிரைக்காப்பதற்காக கதறியழும் மக்கள் கூட்டம் நாளை மூச்சடைத்துப்போகக் கூடும். அப்போது மனம் மாறுபவர்கள் அங்கு போகக்கூடும் அவர்களை மண்போட்டு மூடுவதற்காக.
குறிப்பு: நண்பர் மாதவராஜ் இன் பக்கங்களில் டெல்லிக்கொடுமை
http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_29.html
No comments:
Post a Comment