Sunday, March 29, 2009

காதலைத் தொலைத்தேன்....


இன்று ஆற அமர இருந்து ஒரு படம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹிந்திப்படம் தான் .வார்த்தைகள் புரியாது விட்டால் என்ன? தன் எல்லைகளுக்குள் என்னை அழைத்துச் செல்லும் வலிமை அதற்கு இருந்தது. அல்லது அதன் எல்லைகளுக்குள் என் வாழ்க்கை இருந்ததால் கூட இருக்கலாம். தன் காதலியைத் தொலைத்த ஒருவனின் வெறுமையுடன் படம் ஆரம்பித்தது. எனக்கும் அத்தகைய ஒரு அனுபவம் கடந்து போயிருந்தது.

வாழ்க்கையையே தொலைத்து விட்டதான இருட்டின் நீட்டம் அது. உயிரையே துச்சமென மதிக்கும் வரட்சி அது. படத்தின் நாயகனுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு கூட எனக்குக் கிடைக்காது போனது துரதிர்ஷ்டம். ஆனாலும் நான் அதில் இருந்து மீண்டுதான் வந்திருக்கின்றேன். எல்லோருக்கும் அந்த மனத்திடம் வாய்ப்பதில்லை. ஆனால் வாய்க்க வேண்டும்.

படத்தில் நாயகனும் நாயகியும் சந்திப்பதைப்போல இரயில் இல்லாது பஸ்சில் அது நடந்தது. காலேஜ் போகும் நாட்களில் இருந்த கும்மாளமும் குதூகலிப்பும் சுற்றிவர இளமையை விதைத்து வைத்திருக்கும். வசந்தத்தின் மகரந்தம் எம்மைச் சுற்றியே தூவிக்கொண்டிருக்கும் அழகு அது.

அப்படியொரு நாளில் தான் அவளைச் சந்தித்தேன். "மொழி"யில் பிரகாஷ் ராஜ்ஜிற்கு எரியும் பல்ப் எனக்கும் எரிந்தது. அவளுக்கும் எரிந்திருக்க வேண்fடும். இயல்பாகவே எங்களுக்குள் அது நேர்ந்தது. அவளைப்பிரிந்திருக்க நேர்ந்த பொழுதுகளில் எனக்குள் கவிதை பொங்கியது. வானத்தையும் கடலையும் நிலவையும் பார்த்து கவிதை சொல்லியிருக்கின்றேன்.

பித்துப்பிடித்தவனைப்போல அவளைச்சுற்றி நந்தவனத்தை நட்டுவைத்தேன். பட்டாம் பூச்சிகள் என்னைச் சுற்றியும் பறந்தன. அது ஒரு கனாக்காலம்.
மணலைக்கயிறாகத் திரிக்கும் வல்லமை எனக்குள் வாய்த்திருந்தது. உலகத்தைத் துச்சமாக நோக்கும் நெஞ்சத்திடம் என்னை முழு மனிதனாக்கியது.

எனக்காய்க் காத்திருந்த குடும்பச்சுமையையும் அவள் காதலையும் ஒவ்வொரு தோளில் சுமக்கும் திடம் இருந்தது. அரசியல் சூழ் நிலையில் இடம் மாறவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. காதல் கடிதம்வாயிலாக பரிமாறப்பட காலம் நகர்ந்தது. ஆனால் வாழ்க்கை இலகுவாக இருக்கவில்லை. எண்ணங்களைப்போல வாழ்க்கை இலகுவாய் எப்போதும் இருந்ததில்லை.

கவிதைகள் எழுதக்கூடிய இலகுரகம் இல்லை காசு சேர்ப்பது என்பது புலனாகியது. காதலுக்கு எதுவும் தடையிருக்க முடியாது. ஆனால் கலியாணத்திற்கு இல்லாத தடைகளும் வந்து விடுமே. கடிதங்கள் சிக்குப்பட காதலின் குட்டு வெளிப்பட்டது.

விளைவு , "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பார்த்தைக்கு ஒரு சொல்" என்று பெண்ணின் தந்தையிடம் இருந்து ஒரு கடிதம் . துயரங்களில் துயரம் அது. காதலை விட்டுக்கொடுக்க முடியாது. காதலுக்காக தன் மானத்தையும் விட்டுவிடக் கூடாது. அதனாலேயே காதல் என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது.

சினிமாவில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கவில்லை. ஹிந்தி பேசும் ஆணும் பஞ்சாபி பேசும் பெண்ணும் காதலிப்பதில் சமுதாயச்சிக்கல் எதுவும் காட்டப்படவில்லை. சமயம் மதம் சாதி எதுவுமே ஒரு இதுவாக இருக்கவில்லை.

ஆனால் வாழ்க்கையில் தமிழ் பேசும் இந்துவாய் இருந்த என்னால் அதே அதுவாய் இருந்த பெண்ணை மணமுடிக்க முடியவில்லை. கடைசி கடைசியில் அந்தப்பெண்ணிடம் இருந்து காகிதம் வந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்ததென்று... அவளுக்கு. அப்புறம் என்ன காதலைத் தொலைத்து விட்டு அலைந்தது மிகக் கொடுமை. அதனால் என்ன? வாழ்க்கையைத் தொலைக்கவில்லையே. வாழ்க்கை மிகச்சுவாரஷ்யமானது.
இப்போதைய வாழ்க்கையைப்போல அப்போதைய வாழ்க்கையும் சுவாரஷ்யமாகத்தான் இருந்தது. அது தான் வாழ்க்கை. அந்த அந்தக்கணங்களுள் வாழ்ந்து விடுவது தான் வாழ்க்கை. வாழ்க்கையைப்பற்றிய காதலுடன் சாவதற்குள் வாழ்ந்து விடுவதே வாழ்க்கை. அதை புரிந்து கொள்ள அதிக நாள் எனக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அதிகம் பேர் அதைப்புரிந்து கொள்ளாமலே இறந்து விடுகின்றார்கள்.

ஹலீல் ஜிப்ரானும் சில துடுக்குத் தனங்களும்



நம் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பவர்கள் பரவாயில்லை ரகம். நம் நம்பிக்கைகளே தவறு என்று சொல்பவர்கள் அடாவடி ரகம். அப்படியானவர்களால்த் தான் உலகம் நிரம்பிக்கிடக்கின்றது. அது தான் வாழ்க்கை பற்றிய புரிதல்களை குழிதோண்டிப்புதைக்கும் சாபக்கேடு. நம்பிக்கைகள் தான் வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் கொடிக்காம்பு.

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் "ரிஸெஸ்ஸ"னுக்குக் காரணம் உலகம் உள்ளங்கையில் என்ற நம்பிக்கை. அதுதான் இன்று உலகை அலைகழித்துக் கொண்டிருக்கின்றது. பழைய வரைபடங்களை அழித்து புதிய வரைபடங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. தம் விருப்பங்களையும் மீறி உலக மக்கள் இந்தப்போக்கில் கட்டுண்டு கிடக்கின்றார்கள்.

பல கோடி ரூபாக்கள் கடனுள்ள நாடுகள் எல்லாம் பிராந்தியங்களைக் கூறு போடும் கனவுகளில் மிதக்கின்றார்கள். மனிதத்தை மிதித்து ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்புடன் செயல்படுகின்றார்கள்.

ஆனாலும் உன்வீட்டுக்குள் உன் விருப்பப்படி இருக்க முடிகின்றது. உன் மக்களுடன் உன் மொழியில் பேச முடிகின்றது. அத்தனை ரெளத்ரமாக அது இன்னும் உன்னைச் சுத்திப் பிடிக்கவில்லை. இது உலகத்தைப் பொறுத்தளவில் ஒரு புதிய போக்கு. அது எவ்வளவு தூரம் போகும் என்பதை யாராலும் கூறமுடியாது.

உலகம் பலமுறை அழிந்து பிறந்திருக்கின்றது. புதிய புதிய நம்பிக்கைகள் உலகத்தை ஆட்டிப்படைத்திருக்கின்றன. இருந்த போதும் உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருப்பது என்னவோ தனி மனித நம்பிக்கைதான். தனி மனிதர்களின் கூட்டாகிய சமூகத்தின் நம்பிக்கை ,இனத்தின் நம்பிக்கை. அதை மீறி யாரும் இல்லை.

ஆளப்பிறந்தவர்கள் என்ற ஹிட்லரின் நம்பிக்கையும் அடங்கிப்போக பிறந்தவர்களல்ல என்ற ரஷ்யரின் நம்பிக்கையும் அவரவர் நம்பிக்கை. விளைவுகள் மாறு படக் கூடும். ஆனால் நம்பிக்கைகள் பொய்த்துப்போவதில்லை. ஒரு காலத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டுமென்பதுவும் அல்ல. ஆனால் அவ்வக் காலத்தின் நம்பிக்கையே அன்றைய வாழ்க்கை. அது இல்லையென்று ஆகி விடுவதில்லை.

இந்த நம்பிக்கைகளை மறுதலிப்பவர்கள் மீது கோபம் வருகின்றது. கிராமத்தில் வசிக்கும் இளைஞனின் கனவு பில் ஹேட்ஸ்ஸின் நிறுவனத்தில் வேலை செய்வது .அது அவன் கனவு, வேலை செய்ய முடியும் என்பது அவன் நம்பிக்கை.
அதைக்கேள்வி கேட்கலாம். அதற்கான ஆயத்தத்தைப் பற்றி கேள்வி கேட்கலாம். தயாரிப்புக் குறைபாட்டை சுட்டிக்காட்டலாம். ஆனால் அந்த நம்பிக்கையே தவறு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அந்த இளைஞனின் நம்பிக்கை போன்றது ஈழத்தமிழ் மக்களின் போராட்டம். அந்த மக்களின் நம்பிக்கையே அவர்களை வழி நடாத்துகின்றது. இத்தனை இழப்புகளையும் தாண்டி செயற்பட முடிகின்றது. தனித் தமிழீழம் சாத்தியம் இல்லை என்று கூற யாருக்கும் உரிமையில்லை. அது மனித தர்மங்களை மீறிய கனவு அல்ல.

பாலஸ்தீனியர்களின் நிலங்களைப் பிடுங்கி இஸ்ரேலைக் கட்டியது போன்ற அடாவடியல்ல. தன் நிலத்தில் தான் வாழும் விருப்பு நம்பிக்கையாக அவர்களை வழி நடாத்துகின்றது. அவர்கள் நம்பிக்கையில் தலைபோட அமெரிக்காவிற்கு என்ன தேவை வந்தது. இந்திய அரசியல்வாதிகளுக்கு என்ன உரிமை உண்டு.

அப்பாவி மக்களின் தலைமீது குண்டுபோடும் ஆணவம் எப்படி வந்தது. தமிழ் மக்கள் சிங்களக் குண்டர்களின் குடிமக்களல்ல. வன்னிக்காடுகளில் சிங்களக் காவாலிகளுக்கு என்ன வேலை? வன்னி மக்களின் உயிர்கள் போவது சிங்களக் காடையர்களின் குண்டுகளால்தான்.

வன்னி மக்களின் மீட்பைப் பற்றிப்பேசும் யாரும் குண்டுபோடும் குண்டர்களை நிறுத்தச் சொல்லிக்கேட்கவில்லை. குண்டர்கள் குண்டு போடுவதை நிறுத்தினால் உயிர் இழப்புகள் தவிர்க்கப்படுமே. அங்கிருக்கும் மக்கள் ஒன்றும் அன்னியரின் இடத்தைக் கைப்பற்றியவர்கள் அல்ல. அது அவர்களின் சொந்த இடம் . சொந்த இடத்தில் இருக்கவிடாது வெளியேற்றுவது காப்பாற்றுவதென்பதல்ல.

அன்னியரும் மற்றவர்களும் தங்கள் தேவைக்காக எதையும் சொல்லலாம். அதைக்கேட்பதுவும் கேட்காததும் அம்மக்களின் விருப்பு. மாக்ஸிஸப்போதையில் மாற்றுக் கனவு பற்றிப்பேசும் தமிழ் மூடர்களின் கொடுமை தான் தாங்க முடியவில்லை. குண்டுபோடும் சிங்களவனை மறிக்கவோ கேள்வி கேட்கவோ திராணியற்ற இக்கேணையர் கூட்டம் சொந்தச்சோதரரை திட்டித்தீர்க்கும் எலிக்கூட்டமாகச் செயற்படுகின்றது.

குண்டுகளால் கொன்று போடும் சிங்களக் காடையனின் வேலைகளைத் தானே உன் நேர்மையற்ற சொற்களும் செய்துபோகின்றது. தன் மண்ணில் வாழுவதை தவறென்று சொல்லும் பேடிமை உனக்கெப்படி வந்தது. குண்டு போடும் சிங்களத்தையும் கொம்பு சீவும் வல்லாதிக்கத்தையும் கேள்வி கேட்காது உன் சொற்கள் முனை மழுங்கிப்போனதேன்.

துரியன் தவறு செய்கின்றான் என்று தெரிந்தும் நட்பினால் இணைந்த கர்ணன் எங்கே. தன் மக்கள் சாதல் கண்டும் தமிழாலும் இணையாத உன் நரி முகம் எங்கே.

நம்பிக்கைகள் தான் நாகரீகங்களைக் கட்டியெழுப்புகின்றன. நம்பிக்கைகள் தான் வல்லாதிக்கங்களைத் தகர்த்தெறிகின்றன. தமிழ் மக்களின் நம்பிக்கையும் அதனை ஒரு நாள் செய்யும். அப்போது உனக்கும் ஒரு கல்லறை அங்கே இருக்கும். இவனை போல வாழாதீர்கள் என்ற அறிவிப்புடன்.

இந்த இடத்தில் தான் ஹலீல் ஜிப்ரானை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

"ஒரு நாள்
மெத்த அறிவு படைத்த நாய் ஒன்றின்
பாதையின் வழியே
ஒரு பூனைக் கூட்டம் கடந்து சென்றது.
தன்னைக் கவனிக்காமல்
அப் பூனைக் கூட்டம்
மிகுந்த முனைப்புடன்
முன்னோக்கிச் செலவதைக் கண்ட நாய்
நின்று கவனித்தது.

பூனைகள் வட்டமாக அமர்ந்தன.
மூத்த பூனை ஒன்று,
உறுதியும் எச்சரிக்கையும்
தொனிக்கும் குரலில் சொன்னது,
"சகோதரர்களே..!
வழிபடுங்கள், வழிபடுங்கள்,
நம்பிக்கையோடும், கீழ்ப்படிதலோடும்
மீண்டும் மீண்டும் நாம்
வழிபட்டால்
வானத்திலிருந்து
கணக்கற்ற எலிகள் மழையாகப் பொழியும்.."

இதைக் கேட்ட நாய்
பரிகசித்துச் சிரித்தபடி
தனக்குள் சொல்லிக் கொண்டது,
"இந்த முட்டாள் பூனைகளின்
குருட்டு நம்பிக்கைகளுக்கு
அளவில்லாமல் போயிற்றே..
நமது ஆதி நூல்களில் எழுதப்பட்டு
நானும் எனக்கு முன்னால் என் முன்னோரும்
அறிந்த உண்மைகளின் படி
நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் மிக்க
வழிபாட்டின் பலனாக
மழையாகப் பொழியப் போவது
எலிகளல்ல, எலும்புத் துண்டுகளன்றோ..!"

ஆம் அவரவரின் நம்பிக்கைகள் அவர்களுக்கு முக்கியம். ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் காலில் போட்டு மிதியாதீர்கள்.

நம்பிக்கைகளை வென்றெடுப்பது அதே மக்களாலேயே ஆகக் கூடியது. மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களே. அப்படித்தான் சரித்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டரிடம் கேட்டுப்பாருங்கள். தன்னை எதிர்த்தவர்கள் எல்லாம் வெறும் ஆயுதத்தினால் எதிர்த்தவர்கள் அல்ல. தங்களுக்கு அந்த மண் மீது இருந்த உரிமையினாலேயே எதிர்த்தார்கள் என்று கூறுவார். அலெக்ஸாண்டர் அங்கிருந்து போய் விட்டார். ஆனால் அந்த மக்கள் அங்கிருந்து போகவில்லை.

அதையே தான் சரித்திரம் நாளை ஞாபகப்படுத்தும். வன்னிக்காடுகளில் அலையும் சிங்களவரும் இந்தியர்களும் அமெரிக்கர்களும் நாளை போய் விடுவார்கள். அல்லது துரத்தப்படுவார்கள். அவர்களுடன் சேர்ந்து தமிழர்களாய் இருந்த எட்டப்பர்களும் தான்.

கறுப்பு எஜமான்கள்


வன்னியின் காடுகளில் கந்தகம் மூக்கை அரித்துக்கொண்டிருக்கின்றது. செல்களின் சீழ்க்கை ஒலி மரணதூதனின் திசைகளற்ற பறப்பை எதிரொலித்துக்கொண்டிருந்தது. வாழ்க்கையின் நிரந்தரமின்மையைக் கேள்வி கேட்டதைப்போலவே வாழும் ஆசையையும் போக்கிவிட்டது.

நேற்று இதே முத்தத்தில் ஓடி விளையாடிய குழந்தையை மண்ணள்ளிப்போட்டு மூடியாகிவிட்டது. குழந்தையைத் தோளில் போட்டிருந்த அம்மாவின் கையை தொங்கிய மரத்திலிருந்து புடுங்கி வரவேண்டியதாகப் போய்விட்டது. காய்ந்து தேங்கிய இரத்தத்தை மண்ணள்ளிப் போட்டு காபந்துபண்ணியாகி விட்டது.

ஓடிக்களைத்து விட்ட ஒவ்வோரிரவிலும் கருத்துப்பெருத்த மரங்களின் அடர்த்தியைப்போல மரண பயம் அழுத்திக்கொண்டிருக்கின்றது. மனிதர்களெல்லாம் கைகழுவி விட்ட தீவாந்தரத்தில் ஒதுங்கிக்கொண்டதைப்போல இறுக்கத்தில் சுவாசம் ஒடுங்கிக் கொண்டிருக்கின்றது.

ஓங்கியெழும் கேவல்களையெல்லாம் வன்னிக்காடுகளின் உயர்ந்த மரங்கள் தங்களுக்குள்ளேயே விழுங்கி தீர்க்கின்றன. உலகம் முழுவதும் ஜனநாயகம் பேசும், மனிதம் கதைக்கும் நாடுகள் எல்லாம் எங்கோ ஒதுங்கிப்போய்விட்டன.
பாட்டெழுதும் கவிஞர்களும் "பந்த்" வைக்கும் அரசியல் வாதிகளும் தீர்ந்து போய்விட்டனரா?

தமிழகத்து தொப்பூழ் உறவுகளும் புலம்பெயர் தேசத்து இரத்த உறவுகளும் எம்மை மறந்தே போய்விட்டனரா?

1857 இல் டெல்லியில் இடம்பெற்ற கலவரத்தில் டெல்லியைக் கைப்பற்றியிருந்த சுதேசிப்படைகளிடம் இருந்து 1857 செப்டம்பர் 20ம் தேதி மீண்டும் டெல்லியை மீண்டும் கபளீகரம் செய்தனர். மன்னர் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்தோடு விடவில்லை. வெறி பிடித்துக் கோரத்தாண்டவம் ஆடினர்.

இதனை நேரில் பார்த்த கிரி பித்ஸ் என்பவர் தனது siege of delhi நூலில் எழுதுகிறார்:

“தெருக்கள் கடுமையான அதிர்ச்சியில் தாக்குண்டு மயான அமைதியோடு கிடந்தன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்த பிரதேசத்திலேயா நாம் இப்போது இருக்கிறோம் என்பதையே நம்ப முடியவில்லை.சிப்பாய்களும், ஜனங்களும் உயிரற்றுத் தரையெங்கும் எல்லாத் திசைகளிலும் கிடந்தார்கள். குடலைப் புரட்டுகிற தாங்க முடியாத நாற்றம் காற்றில்...”

அடிவயிறு பதைபதைக்க பெருந்துக்கத்தின் சாட்சியாய் கிடந்தது அந்த மண்.

அந்த மண்ணின் சந்தோஷங்களும் இருப்பும் ஆக்கிரமிப்பின் வல்லுறவில் அழித்து ஒடுக்கப்பட்டது.

1857 டிசம்பரில் கவிஞர் மிர்ஜா காலிப் தனது நண்பருக்கு எழுதுகிறார்...

முன்ஷி ஹர்கோபால் தஃப்தா அவர்களுக்கு!

நாமெல்லாம் கூடிக் கவிதைகள் பாடி இன்பமாகப் பொழுது போக்கிய அந்தக் காலம் இப்போது கனவு போல் இருக்கிறது. இன்று அந்தச் சூழ்நிலை, அந்த நிலவரம், அந்த வசதி எல்லாம் போய் விட்டன. நட்பு, பரிவு, மதிப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.

நான் வேறு பிறவி எடுத்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது இருந்த டில்லியா இது. மக்கள் எல்லோரும் டில்லியை விட்டுப் போய் விட்டார்கள். போகாதவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ள நிலைமையை எழுதவே அச்சமாய் இருக்கிறது. ஆங்கிலேயே ஜெனரல் துரை ஆட்சியில் கெடுபிடி அதிகம். கோட்டை வாசலில் தினமும் விசாரணை. வழக்கு, பரிசோதனை. இன்று வரை அதே நிலைமைதான். மேலே என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.


இது டெல்லி மண்ணுக்கு இரண்டாவது பேரழிவு. முதல் முறை விதேசி மன்னன் ஷாநவாசின் படையெடுப்பின் போது டெல்லி நகரம் மூளியாக்கப்பட்டது. கண்டவர் அனைவரையும் இரவுபகலாக வெட்டியெறிந்து பிணமலையைக் குவித்தனர். அன்றை பாதுஷா அவன் காலடியில் விழ எஞ்சியிருந்தவர்கள் தப்பிப்பிழைத்தனர்.

அன்று வெள்ளை எஜமான்களின் விரலசைவில் டெல்லி துவண்டது. இன்று அதே டெல்லி எஜமான்களின் கண்ணசைவில் வன்னி துக்கித்துப்போய் இருக்கின்றது.

அன்று தங்களை மனிதர்களாய் எண்ணி இரங்கல் பா எழுதியவர்கள் இன்று எவ்வாறு நினைத்துக்கொண்டு மரணப்பா எழுதிக்கொண்டிருக்கின்றார்களோ?

இன்று வன்னியின் காடுகளுக்குள் வாழ்வதற்காகவன்றி தங்கள் உயிரைக்காப்பதற்காக கதறியழும் மக்கள் கூட்டம் நாளை மூச்சடைத்துப்போகக் கூடும். அப்போது மனம் மாறுபவர்கள் அங்கு போகக்கூடும் அவர்களை மண்போட்டு மூடுவதற்காக.


குறிப்பு: நண்பர் மாதவராஜ் இன் பக்கங்களில் டெல்லிக்கொடுமை

http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_29.html

Friday, March 27, 2009

நட்ராஜ் கிட்டேருந்து எஸ் எம்மெஸ்ஸூ


கல்யாணியில் சுகித்து கால்தடக்கி விழுந்து உறங்கிக்கொண்டிருந்த என்னை நம்ம சகா இடறி எழுப்பினான். போதையின் மயக்கம் சிதைந்த கோபம் கிளர்ந்து எழுந்தது.
"என்னாப்பா.."
"நட்ராஜூ அன்ணன் எஸ் எம்மெஸ்ஸூ.."
"எவண்டா அவன் பேமானி.."
கல்யாணியின் தழுவல் குலைந்ததில் எரிச்சல் ஏறிப்போயிருந்தது.

"நம்ம சசியக்கா ஹஸ்பண்ட் நட்ராஜ் அண்ணே"
"அடடே நாம கோபாலபுரம் போன கதை அவங்களுக்கும் தெரிஞ்சிடுத்தா..? என்னடா என்ன சொல்லுரார்.."

"காலைல சந்திக்க முடியுமான்னு கேட்கிராரு..''

"அடே அந்த சாவு கிராக்கிங்கள தொரத்திப் புடிக்கணும்டா காலைல.."

"அதும் முன்னாடி போய்ப்பார்க்கலாமா..? இல்லே போனில பேசிரீங்களா? .."

"சரி போனலயே கனக்ட்பண்ணுடா? "

"அலோ அண்ணாச்சி .." கலைந்திருந்த வேட்டியை இழுத்து சரிக்கட்டி எழுந்திருப்பற்கிடையில் மறு முனை கரகரத்தது.

"என்னாப்பா நம்மள கலந்துக்காம கோபாலபுரம் மட்டும் போயிருக்கீங்க..."

"அதொன்ணுமில்ல அண்ணாச்சி .. நீங்க நம்ம வை கோ அண்ணாச்சி எல்லாம் சேந்து டாக்குத்தரையாவை வளைச்சுப்போடுறதில மும்முரமா இருக்கீங்களா அதுதான்..." ஒருவிதமாக சமாளித்து தலையைச் சொறிந்தேன்.

"அதெல்லாம் ஒன்ணுமில்லப்பா .. நம்ம கூட்டணிதான் ஜெயிக்க்குமின்னு நம்ம மலையாள ஜோஸிசர் சோழி போட்டுப் பார்த்து சொல்லிப்புட்டாரு. அதும் இல்லாம ஈழத்தமிழரு போராட்டம் வெடிச்சு காங்கிரஸ் காரனை வீட்டுக்கு அனுப்புரதுன்னு நம்ம தமிழக ஜனங்களெல்லாம் கொந்தளிச்சுக்கிட்டிருக்கானுங்க... கலைஞரு கூட காங்கிரஸ்காரன் கூட்டு வைச்சிருக்கான்ல... அந்தக் கூட்டணி வீட்டுக்குப் போயிரும்னு நம்ம வை கோ அண்ணாச்சி அடிச்சு சொல்லிக்கிட்டிருக்காரு. அவரு சொன்ன படியே நம்ம புரட்சித்தலைவலியும்..ஈழத்தமிழர் சார்பா உண்ணாவிரதமிருந்தாங்க...அவரு கூட இருந்த டாக்குத்தரையாவையும் வளைச்சுப் போட்டாச்சு...."

"என்னா அண்ணாச்சி நம்ம புரட்சி தலைவியைப் பார்த்து இப்பிடியொரு வார்த்தை சொல்லிப்புட்டீங்க..?"

"அட தலைவலி நமக்கு மட்டும்தாம்பா.. இப்படித்தான் சமயம் தெரியாம வாயில வந்துடுத்து.... ஓவ் த ரெக்கோட் .. சரி என்ன சொல்ல வந்தேன்... நாம ஆட்சிக்கு வாரது ஹன்ரட் பர்சண்ட் நிஜமுங்க.... நம்ம புரட்சித்தலைவி உங்களக் கண்டாக்ட் பன்ணச் சொன்னது..."

சாவகாசமாக உட்கார்ந்திருந்த நான் திடும்னு எழுந்து நின்னேன். கால்ல விழண்ணும்னு பார்த்தா அம்மாதான் முன்னாடி இல்லையே...

புரட்சித்தலைவியே நம்மள கண்டாக்ட் பண்ணச்சொன்னாங்கன்னா...அவங்க விடுமுறை விடுமுறைன்னு சொல்லிப்போறது நம்மை மாதிரி உள்ளவங்க பதிவைப் படிக்கத்தான்னு இப்போ புரிந்தது. கலைஞர் மக்கள் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பது எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு என்று இப்போதல்லவா புரிகின்றது.
மக்கள் பிரச்சினையை இந்தப் "பதிவுகள்" தான் எடுத்துச் சொல்கின்றன என்று எப்படி மக்களின் நாடித்துடிப்பை புரிந்துகொண்டிருக்கின்றார். ஆச்சரியமாக இருக்கின்றதே.

பம்மிக்கொண்டு அண்ணாச்சி என்ன சொல்லப்போறாருன்னு காத்திருந்தேன்.

"நம்ம ஆட்சியில உங்களத்தான் அரசவைக் கவிஞராப்போடணும்கிறது...அம்மாவோட விருப்பம்.."

"அடடே அண்ணாச்சி இதுவென்ன விபரீதம்... கவிப்பேரரசு வைரமுத்து வகையறாக்கள் இதற்கென்றே கவிஞர்களாய் வலம் வந்து கொண்டிருக்க ..போயும் போயும் என்னை மாதிரி கவிதையே தெரியாத..'

"உஷ் அதெல்லாம் சொல்லப்படாது..அதெல்லாம் ஏன் சொல்லுறாய்..." கில்லி பிரகாஷ் ராஜ் போல என்னைப்பேச விடாது மிரட்டினார்.

"கவிதை தெரியாதவனையும் கவிஞர் ஆக்கிரதுதான் நம்ம புரட்சித்தலைவி ஸ்டைல்... இல்லேன்னா புரட்சித் தலைவியா இருந்து என்ன பயன்.." இறுதியாக ஒரு பிட்டுப் போட்டுவிட்டு போனை "டொக்"கின்னு வைத்து விட்டார்.

இதுக்காகவே இப்போ நம்ம வலைப் பதிவர் அண்ணாச்சி போல் கவுஜை எழுதப் பழகிக்கிட்டிருக்கேன்.

"ஆட்சியில் இருப்பது
அன்ணாவின் பேரில்
அடங்கி விழுவது
அம்மாவின் காலில்

தேர்தலில் வெல்வது
சண்டித் தனத்தில்
வென்றதில் கிடைப்பது
வண்டிக் கணக்கில்.."

இந்த வகையில் நம்ம கவுஜை முயற்சி தொடர்கின்றது.

எதற்கும் விடியட்டும் பார்க்கலாம்.

நாங்களும் கோபாலபுரம் போனோமில்லே


எலக் ஷனும் அதுவுமா தமிழ்நாடே கொந்தளிச்சுக்கிடக்கிர நேரத்தில...இணைப்பும் தொடுப்புமா ஒரு மகா ரேசில கட்சிக ஓடிக்கிட்டுருக்கும் போது.. ஆனானப்பட்ட விசயகாந்து பாட்டாளி டாக்குத்தரையா எல்லாரும் திபோ திபோன்னுஅடிச்சுக்கிட்டிருக்கிற நேரத்தில...இது வேணுமான்னு கேட்டுப்ப் பார்த்தேன். என்ன கொந்தளிப்போட கொந்தளிப்பா நம்ம கோபாலபுரம் விசிட்டயும் சொல்லிப்புடுவோம்னு பட்டுது. இனியென்ன சொல்லிட வேண்டியது தான.

நீங்க எந்தக்கட்சி என்ன விஷயம்னுல்லாம் கொந்தளிச்சுக்கிட்டிருக்கீங்க கொஞ்சம் அடங்குங்க. எல்லாத்தையும் விலாவரியா சொல்லிப்புடுவம் இல்லை. அது ஒரு சூடேறிப்போன வெய்யில் சுட்டெடுத்த காலைப்பொழுது. கோபாலபுரம் சாலை மஞ்சள் கல்லில கறுப்பெழுத்து . சரியான இடத்துக்கு வந்துட்டோம்னு மனசுக்கு நிம்மதி.

நம்ம கலைஞர் இங்க தாம்பா இருக்காரு....கூட வந்தவர் ஆச்சரியம் அதிசயம் கலந்த கலவையுடன் ஞானப்பெருக்காக பகர்ந்து புல்லரிச்சாரு. அது சரிப்பா நாம வந்த வேலைய பாக்க வேணாமா?

நான் மறுபடியும்.... நாங்க வந்திருக்க வேலையை (எத்தனை சீட்டு எந்தெந்த தொகுதி .. அவசரப்படாதீங்கப்பூ ) ...

கொஞ்சம் பொறுங்கப்பா .."பொறுத்தார் புவி ஆள்வார் பொங்குனார் காடுறைவார் " பெரியவங்க சொல்லியிருக்காங்கப்பா.. புவி ஆளத்தானே வந்திருக்கம்..

"என்னப்பா இந்த புத்தகக் கடை முன்னாடி கூட்டம்..? "

"சினிமா சூட்டிங்கப்பா.. "
"அட சந்திக்கு சந்தி இவங்க ரோதனை.."

எலக் ஷன் பத்தியெல்லாம் கவலைப்படாத ஜென்மங்க.. அரசியலால மாத்த முடியாத ..அதைபத்தி நம்பிக்கையே இல்லாத இவங்க சினிமாவால என்ன சமுதாயப்புரட்சியைச் செய்யப் போறாங்களோ.. மனதிற்குள் சலிப்பேற்பட்டது.

இவர்களைப்பொறுத்தவரை அரசியலும் சினிமா போல ஒரு படங் காட்டல் தான். இல்லேன்னா எப்படி.... இப்போ வருவேன் ...வரும்போது வருவேன்... எப்போதும் வருவேன் னு .. படங்காட்ட முடியுது. அவங்க கூறும் வார்த்தைச் சிலம்பைப்பிடித்து அக்குவேறு ஆணி வேறாக பிரித்தெடுத்து தட்டி கட்டும் இந்த சமுதாயத்தை யாரால் காப்பாற்ற முடியும்.

யாரோ யாரோ படங்காட்ட தன் இளமையையும் தன் தந்தையின் உழைப்பையும் தாரை வார்க்கும் இளைய சமுதாயம் தானே நாளைய நம்பிக்கை நாயகர்கள்.

சரி சரி வந்த வேலை.. முதல்ல அன்ணாச்சியைப் பாக்கணும் .. அவர் தான இறைவன் முன்னாடி நந்தி மாதிரி... நந்தி தரிசனத்துக்கு அப்பால தான தலை தரிசனம் அதுதாங்க தல பெருமாள் தரிசனம்..

என்னா டைரக்டரு நம்மளயே பாக்கிராப்போல .. என்ன நம்ம மனப்பிராந்தியோ.. சும்மா சொல்லப்படாதுங்கோ கொஞ்சம் செவலையா வெடவெடன்னு உயரமாய் இருப்பேனுங்க. அடுத்த படத்துக்கு கதாநாயகன் தேடுறாரோ... மனசுக்குள்ள லேசா நெனப்பு ஓடினாலும் .. நம்ம ரேஞ்சுக்கு... கீறிக்கிளர்ந்த செருக்கு (என்னா ஒரு அப்பாவித்தனம்) கண்டுக்காம நகர வைச்சது.

அன்ணாச்சி அடிக்கொரு தரம் உஷ் ..உஷ் ..அப்பாடா என்று வியர்த்துக்கொண்டிருந்தார். நாங்க போன விடயத்தை ஞாபகப் படுத்த முனைந்தபோதெல்லாம் எங்களுக்கு வெய்யிலின் கொடுமையைப் பத்தி
லெக் ஷர் அடித்துக்கொண்டிருந்தார். "நல்லா தயிர் சாப்பிடுங்கப்பா.." அட்வைஸ் வேற..

இப்படியே போனா நம்ம அம்பிஷன் என்னாவுரது.. உலகத்தை ஆளப்புறப்பட்ட இளமை கேள்வி கேட்டது. ஒரு ஆபிரகாம் லிங்கன் போல ஒரு கார்ல் மார்க்ஸ் போல .. இவங்க இருவருக்கிடையிலும் ஒரு தொடர்பும் கிடையாது. ஆனாலும் அவங்களுக்கிருந்த அந்த பாப்புலாரிட்டி தான் அவர்களை எங்களுக்கு வாலிபத்தில் அறிமுகப்படுத்தியது. அப்புறம் அவங்களைப்படித்தது தெளிந்தது வேற கதை..

அண்ணாசி ..அசருற ஆளாத் தெரியல்லே.. அப்புறம் பார்க்கலாம்னு தண்ணி தெளிச்சு அனுப்பிட்டாரு.

திரும்பி வரும் போது தான் சந்தேகம் வந்தது. நாம் அங்கு போகும் போது தெருமுக்கில் சென்று மறைந்த அந்தக் குழு .. எங்களை முந்திக்கொண்டதோ என்று...

"நாளக்கி அவங்களை அமுக்கிடணும்பா"

சரி அமுக்கினாத்தானே தெரியும் யார் ஜெயிச்சதுன்னு...

( அடங்குங்கப்பா நாளைக்குப்பார்க்கலாம்..)

Thursday, March 26, 2009

நல்லா சிரிங்கடே


நம்ம முத்துலெட்சுமி அம்மா ஒரு பதிவு போட்டிருக்காங்க சாருன்னா ச்சோர்(திருடன்)ன்னு "சிறுமுயற்சியில. அது சிறு முயற்சியில்ல பெருமுயற்சி.
நம்ம பிளீச்சிங் பவுடர் தொடக்கி வைத்த சாரு நிந்தனையில் அடுத்த மைல் கல்லுன்னு அடிச்சுப்பிடிச்சு அங்கே ஓடுனா..


"சாருன்ன உடனே நான் வேற ஏதோ இல்ல நினைச்சிட்டேன் ,வந்து பார்த்தா அக்கா சொந்தக் கதை " மிஸஸ் டவுட்டுக்கு வந்த அதே டவுட்டுத்தான் நமக்கும்.

"என்னங்க தலைப்ப பார்த்துட்டு எதோ எதிர்வினை, விவாதம், பின்நவீனத்துவம் இப்படி எதாவது இருக்கும்னு பார்த்தா" வாழ வந்தான் திட்டாத குறைதான்.

"சூடான இடுக்கைக்கு ஒரு இடம் புக் பண்ணுங்கப்பா...நல்ல தலைப்பு ஒன்னு கிடைச்சிருக்கு.." கண்டு பிடிச்சது நான் ஆதவன். நானில்லீங்க அது அவரு.

அதே போல பதிவு ரொம்பச்சூடாயிட்டுது.

நம்ம கதை இனித்தாங்க.. காமெண்ட்ஸ்ஸைஅலசி ஆராஞ்சு போனா நம்ம தெகா ஒரு கதை வுட்டிருக்கார் இப்பிடி..

"ஆமாங்க டெல்லியில ரொம்ப மோசமின்னு நினைக்கிறேன் இந்த மாதிரி விசயங்களைப் கேள்விப் படும் பொழுது. நான் அங்கு ஒரு முறை வந்திருந்த பொழுது இப்படித்தான் ஓடும் ரயிலில் ஜன்னலின் வழியாக கையை விட்டு பெரிய தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு இறங்கி விட்டான் ஒருவன், பாவம் அந்த ஜோடிகள் புதிதாக திருமணமான ஆட்கள் போல, பொண்ணு கிட்டத்தட்ட சென்னை வரும் வரையில் நினைத்து நினைத்து ஒரே அழுகைதான்..."

இதை வாசிச்சப்புறம் நமக்கு அழுகை வரலீங்க சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சுங்க..

ஒரு மாதிரிப்பாக்காதீங்க விஷயத்தை சொல்லிப்புடுரேன்.

" ஜன்னலின் வழியாக கையை விட்டு பெரிய சங்கிலியை அறுத்துக் கொண்டு
அவன் ஓட நம்மாளுங்க நாலைஞ்சு பேர் அவனைத் துரத்த ..அவன் ஓடோடென்னு ஓடி இவங்க கண்ணில மண்ணைத்தூவி தப்பிச்சு விட திரும்பி வந்த இவங்க அந்தப்பொண்னு தாலிச்சங்கிலியை எடுத்து கண்ணில ஒத்திறதைப் பார்த்து நொந்து போக சங்கிலியைக் கொண்டு போனவன் சங்கிலியைப்பார்க்க அது தங்கச் சங்கிலி இல்லீங்க ரெயிலின் "அபாயச் சங்கிலி" .

நொந்து நூலாயிட மாட்டான். இப்போ நீங்களும் சிரிங்கடே

(நம்ம அண்ணாச்சியின் நல்லாருங்கடேயில் இருந்து சுட்டது நல்லா சிரிங்கடே.. டாக்டருங்க மன்னிச்சுக்கங்க.. உங்க தொழிலுக்கு இது நஷ்டக் கணக்குத் தான்.. நல்லா சிரிங்கடே)

கெளபோயின் கனவுகள்

குனிஞ்சுக்க குதிரை ஏறலாம்

உலகையே புரட்டிப்போட்ட அதாங்க 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர் கொண்டு வந்த ஜார்ஜ் புஸ்ஸை உலகம் அவ்வளவு எளிதில் மறக்காது. அவர் நடையும் சிரிப்பும் ரெக்ஸாஸ் குதிரைக்காரன் ஸ்டைல்தான். இரண்டு மாதம் முன்னாடி அவர் ஊருக்கு ஒரு விசிட் அடிச்சேன். சும்மா சொல்லக்கூடாது நம்ம வாகனமும் குதிரைமாதிரித்தான் பாய்ந்து பாய்ந்து போனது. அல்லது நமக்குத்தான் தோணித்தோ என்னவோ.. அது என்னங்க பகலில் ஒரு ஸ்பீட் லிமிட் (70 மைல் பேர் அவர்) இரவில் ஒரு ஸ்பீட் லிமிட் (65 மைல் பேர் அவர்). "இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதினில் " என்னங்க ஸ்பீட் லிமிட்?

அந்த ஊர் பொலீஸ்காரங்களும் அதே. அதாங்க கெளபோய் டைப்பாத்தான் இருக்காங்க. இரவில் பயணம் மகாரோதனை. வழியெங்கும் வாகனங்களை இரண்டு மூன்று பொலீஸ் கார்கள் வழிமறித்துக்கொண்டிருந்தன. என்னவென்று விசாரித்தால் ..காதைக்கொண்டு வாருங்கள் போடர் ஸ்ரேட்டாம். மஜா அயிட்டமெல்லாம் வழி மாறி தடம் மாறி அமெரிக்க டாலரை அள்ளிக்கிட்டிருக்காம். மஜா அயிட்டம் சத்தியமா பொன்ணுங்க கிடையாது.

ரெக்ஸாஸ் ஸ்ரேட்ஸ் எல்லையில் இருந்து 30 ஏ மைல்கள்தான் ஆர்க்கன்ஸாஸில் இருக்கின்றது நம்ம மதனகாமராஜன் பில்லுடைய பேர்த் பிளேஸ்.இரண்டு பதவிக்காலத்தை ஹுக்கா மொக்கா பண்ணி வந்திருந்தாலும் உலகத்தையே தனியாளா எதிர்த்து (கெளபோய் நெனைப்பு அப்பிடித்தாங்க இருக்கும்)நின்ற துணிச்சலை எப்படிச் சொல்லுவது.

அவர் பேச்சுக்கு ஆமா போட்ட பாவத்துக்கு ரொனி பிளையர் மலரும் நினைவுகளில் மூழ்கி இருக்கும் போதே தனியாக திரில் காட்டியவராச்சே. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேண்டுமே.

நம்ம காக்கா சுடும் துவக்குப்புகழ் சதாம் உசேனை பாதாளத்தில் இருந்து தோண்டியெடுத்து கல்லறைக்கு அனுப்பியது வரை கச்சிதமாகக் காரியம் ஆற்றிய ஈராக்கில் தான் நம்மாளின் கனவுகளில் தொற்றிக் கொண்ட பயங்கரவாதம் விளைந்தது.

நம்ம பாட்டி அடிக்கொருதரம் சொல்லிக் கொள்வாங்க. "தினை விதைச்சவன் தினை அறுப்பான் வினை விதைச்சவன் வினை அறுப்பான்னு".


விதைச்ச தினைக்கு வரவேற்பு

நாம தினையும் விதைக்கல்ல வினையும் விதைக்கல்ல. ஆனா நம்மாள் விதைச்ச பயங்கரவாதம் செருப்பு மூலமா பயங்கரவாதமா திரும்பிச்சில்லே. சதாம் உசேனின் சிலையை முறிச்சுப்போட்ட தைக் காட்டிய அதே டி வி க்கள்லே அதே திக்கிரித் டவுனிலே அதே இடத்தில நம்மாளைத் தாக்கிய செருப்பைக்காட்டினா நம்மாளு நொந்து போகாம என்ன பன்ணுவார்.

எட்டு வருஷ உலக தாதா வாழ்க்கை அது முன்னாடி வாழ்ந்த கெளபோய் வாழ்க்கை, இனி வாழ்ப்போற வாழ்க்கை எல்லாத்தையும் துரத்தப்போறதே இந்த பயங்கரவாதம் செருப்பு வடிவிலே. இனி அவர் வாழ்க்கையில் செருப்பில்லாத கனவு வரும்கிறீங்க. சான்ஸே இல்ல.

ஒரு வார்த்தைக்குத் தாங்க அவர் பொண்டாட்டி பார்பரா "போய்யா பேமனி செருப்பால அடிவாங்கினீ தானே.." அப்பிடீன்னு ஒரே ஒரு தரம் சொல்லிட்டாலே ..எந்த முகமூடி போட்டு முகத்தை மறைப்பாரு நம்ம கெளபோய்... பாவமாயில்ல..நா ரொம்ப பீல் பண்ணுரேங்க..