Sunday, March 29, 2009

காதலைத் தொலைத்தேன்....


இன்று ஆற அமர இருந்து ஒரு படம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹிந்திப்படம் தான் .வார்த்தைகள் புரியாது விட்டால் என்ன? தன் எல்லைகளுக்குள் என்னை அழைத்துச் செல்லும் வலிமை அதற்கு இருந்தது. அல்லது அதன் எல்லைகளுக்குள் என் வாழ்க்கை இருந்ததால் கூட இருக்கலாம். தன் காதலியைத் தொலைத்த ஒருவனின் வெறுமையுடன் படம் ஆரம்பித்தது. எனக்கும் அத்தகைய ஒரு அனுபவம் கடந்து போயிருந்தது.

வாழ்க்கையையே தொலைத்து விட்டதான இருட்டின் நீட்டம் அது. உயிரையே துச்சமென மதிக்கும் வரட்சி அது. படத்தின் நாயகனுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு கூட எனக்குக் கிடைக்காது போனது துரதிர்ஷ்டம். ஆனாலும் நான் அதில் இருந்து மீண்டுதான் வந்திருக்கின்றேன். எல்லோருக்கும் அந்த மனத்திடம் வாய்ப்பதில்லை. ஆனால் வாய்க்க வேண்டும்.

படத்தில் நாயகனும் நாயகியும் சந்திப்பதைப்போல இரயில் இல்லாது பஸ்சில் அது நடந்தது. காலேஜ் போகும் நாட்களில் இருந்த கும்மாளமும் குதூகலிப்பும் சுற்றிவர இளமையை விதைத்து வைத்திருக்கும். வசந்தத்தின் மகரந்தம் எம்மைச் சுற்றியே தூவிக்கொண்டிருக்கும் அழகு அது.

அப்படியொரு நாளில் தான் அவளைச் சந்தித்தேன். "மொழி"யில் பிரகாஷ் ராஜ்ஜிற்கு எரியும் பல்ப் எனக்கும் எரிந்தது. அவளுக்கும் எரிந்திருக்க வேண்fடும். இயல்பாகவே எங்களுக்குள் அது நேர்ந்தது. அவளைப்பிரிந்திருக்க நேர்ந்த பொழுதுகளில் எனக்குள் கவிதை பொங்கியது. வானத்தையும் கடலையும் நிலவையும் பார்த்து கவிதை சொல்லியிருக்கின்றேன்.

பித்துப்பிடித்தவனைப்போல அவளைச்சுற்றி நந்தவனத்தை நட்டுவைத்தேன். பட்டாம் பூச்சிகள் என்னைச் சுற்றியும் பறந்தன. அது ஒரு கனாக்காலம்.
மணலைக்கயிறாகத் திரிக்கும் வல்லமை எனக்குள் வாய்த்திருந்தது. உலகத்தைத் துச்சமாக நோக்கும் நெஞ்சத்திடம் என்னை முழு மனிதனாக்கியது.

எனக்காய்க் காத்திருந்த குடும்பச்சுமையையும் அவள் காதலையும் ஒவ்வொரு தோளில் சுமக்கும் திடம் இருந்தது. அரசியல் சூழ் நிலையில் இடம் மாறவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. காதல் கடிதம்வாயிலாக பரிமாறப்பட காலம் நகர்ந்தது. ஆனால் வாழ்க்கை இலகுவாக இருக்கவில்லை. எண்ணங்களைப்போல வாழ்க்கை இலகுவாய் எப்போதும் இருந்ததில்லை.

கவிதைகள் எழுதக்கூடிய இலகுரகம் இல்லை காசு சேர்ப்பது என்பது புலனாகியது. காதலுக்கு எதுவும் தடையிருக்க முடியாது. ஆனால் கலியாணத்திற்கு இல்லாத தடைகளும் வந்து விடுமே. கடிதங்கள் சிக்குப்பட காதலின் குட்டு வெளிப்பட்டது.

விளைவு , "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பார்த்தைக்கு ஒரு சொல்" என்று பெண்ணின் தந்தையிடம் இருந்து ஒரு கடிதம் . துயரங்களில் துயரம் அது. காதலை விட்டுக்கொடுக்க முடியாது. காதலுக்காக தன் மானத்தையும் விட்டுவிடக் கூடாது. அதனாலேயே காதல் என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது.

சினிமாவில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கவில்லை. ஹிந்தி பேசும் ஆணும் பஞ்சாபி பேசும் பெண்ணும் காதலிப்பதில் சமுதாயச்சிக்கல் எதுவும் காட்டப்படவில்லை. சமயம் மதம் சாதி எதுவுமே ஒரு இதுவாக இருக்கவில்லை.

ஆனால் வாழ்க்கையில் தமிழ் பேசும் இந்துவாய் இருந்த என்னால் அதே அதுவாய் இருந்த பெண்ணை மணமுடிக்க முடியவில்லை. கடைசி கடைசியில் அந்தப்பெண்ணிடம் இருந்து காகிதம் வந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்ததென்று... அவளுக்கு. அப்புறம் என்ன காதலைத் தொலைத்து விட்டு அலைந்தது மிகக் கொடுமை. அதனால் என்ன? வாழ்க்கையைத் தொலைக்கவில்லையே. வாழ்க்கை மிகச்சுவாரஷ்யமானது.
இப்போதைய வாழ்க்கையைப்போல அப்போதைய வாழ்க்கையும் சுவாரஷ்யமாகத்தான் இருந்தது. அது தான் வாழ்க்கை. அந்த அந்தக்கணங்களுள் வாழ்ந்து விடுவது தான் வாழ்க்கை. வாழ்க்கையைப்பற்றிய காதலுடன் சாவதற்குள் வாழ்ந்து விடுவதே வாழ்க்கை. அதை புரிந்து கொள்ள அதிக நாள் எனக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அதிகம் பேர் அதைப்புரிந்து கொள்ளாமலே இறந்து விடுகின்றார்கள்.

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்வில வசந்தம் பெற்ற நண்பரே வாழ்த்துகள்..

"திங்"கர் said...

வாருங்கள் ஞானசேகரன்!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் வாழ்வும் வசந்தமாய் பூக்க என் அன்பும்...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Post a Comment